Councils

டாக்டர்.தொல்.திருமாவளவன் அவர்களுடன் சந்திப்பு.

பௌத்தர்களின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு டாக்டர். தொல்.திருமாவளவன் அவர்களின் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

26.09.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் டாக்டர். தொல் .திருமாவளவன் அவர்களை தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை நிர்வாகிகள் மற்றும் பிக்குகள் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா அவர்களின் தலைமையில் சந்தித்தனர். உடன் சங்க மகா செயலர் வண.சமண அரிய பிரம்மா, சங்க மகா திசைச் செயலர் வண. புத்த பிரகாசம், போதி சந்திரன், திருநாவுக்கரசு, பேராசிரியர் வேலுச்சாமி, வசந்தராமன், சங்கத்தமிழன் மற்றும் உபாசகர்கள் உடன் இருந்தனர்.

பேரவையினர் முன்வைத்த கோரிக்கைகளை நிதானமாகக் கேட்ட டாக்டர்.தொல்.திருமாவளவன் அவர்கள் கோரிக்கைகள் அத்தனையும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற துணை நிற்பேன் என்ற உறுதியினை அளித்தார். மேலும் மத்திய அரசிடன் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் இருப்பின் அவற்றினையும் பிரதம அமைச்சரை சந்தித்து நிறைவேற்ற முயல்வோம் என்ற உறுதிமொழியினையும் அளித்தார்.

மனுவின் விவரம்

திருமிகு.டாக்டர்.தொல்.திருமாவளவன் அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்.
தலைவர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி


பொருள்: தமிழகத்தின் மதச் சிறுபாண்மை பிரிவினரான பௌத்தர்களின் கோரிக்கைகள்.


ஐயா அவர்களுக்கு வணக்கம்,


தமிழ்நாட்டின் நம்பிக்கைப் பெற்றத் தலைவராகவும் எதிர்காலத்தில் தமிழகத்திற்கு தலைமையேற்று வழிநடத்வுள்ளத் தங்களுக்கு எமது அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தங்களது பணிக்காலத்தில் தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறோம். இந்த சிறப்பு மிகு தருணத்தில் தமிழக பௌத்தர்களின் உரிமைகள் தொடர்பாக சில முன் மொழிவுகள் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
தமிழகத்தில் பன்னெடுங்காலம் தழைத்து தமிழ் வளர்த்து அரசோச்சிய பகவன் புத்தர் நிர்மாணித்த பௌத்தம் 12ம் நூற்றாண்டுக்கு பிறகு அழிக்கப்பட்டது என்பது வரலாறு. அதன் தொடர்ச்சியாக பௌத்த தலங்களும், புத்தர் மற்றும் பௌத்த சிறு தெய்வங்களின் சிலைகளும் சிதைக்கப்பட்டன. அவற்றில் பல தற்போது தோண்டும் பல இடங்களில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது தாங்கள் அறிந்ததே.


அது மட்டுமின்றி 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பண்டிதர் அயோத்திதாசர், பேராசியரியர்.லட்சுமி நரசு, சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் ஆகியோர் பௌத்த மறுமலர்ச்சியை தமிழகத்தில் உண்டாக்கினார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பௌத்தர்கள் என்று அடையாளப்படுத்தினார்கள். அதுமுதல் தமிழகத்தில் பௌத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஏராளமான பௌத்த விகாரைகள் என்னும் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன. அவற்றில் இன்னும் பல மக்கள் பயன்பாட்டில் உள்ளன.


மேலும் தமிழகத்தில் ஏராளமான பௌத்தர்கள் தங்களது மதத்தினை அமைதியாக பேணி வருகின்றனர். சட்டப்படியான அங்கீகாரம் கிடைப்பதில் உள்ள நடைமுறை இடர்பாடுகளினால் சான்றிதழ்களில் பௌத்தர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. அதுமட்டுமின்றி தங்களது வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்துக் கொள்வதிலும் கடும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். தமிழகத்தின் ஆதி மதங்களுள் ஒன்றான பௌத்தத்திற்கு இப்படி ஒரு நிலை வருவது கெடுவாய்ப்பானது என்பதை தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். அதன்படி எங்களது கோரிக்கைகளை பின்வருமாறு வகைப்படுத்தி தங்களது பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

 1. சமணம் என்கிற பொதுச் சொல் பௌத்தம், ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய அமணர் மதங்களைச் குறிக்கும் பொதுச்சொல். இச்சொல்லை ஜைனத்தை மட்டும் குறிக்கும் சொல்லாகப் பயன்டுத்தக் கூடாது என்பதை அரசு அறிவிக்க வேண்டும்.
 2. தமிழக இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் சமண மதத்தினை கொண்டு வந்து பாதுகாத்து உதவிகளைச் செய்வது போல பௌத்த மதத்தையும் கொண்டு வர வேண்டும். அதை அத்துறையின் கீழ் தனியாக பௌத்த அறநிலையப் பிரிவு என அடையாளப்படுத்த வேண்டும்.
 3. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறுபான்மையினர் ஆணையங்கள் பௌத்தர் மற்றும் ஜைனர்களை முற்றாக புறக்கணித்துள்ளன. எனவே இந்த சிறுபான்மையினர் ஆணையங்கள் மாற்றப்பட்டு, அவை நேரடியாக பௌத்த சிறுபான்மையினர் ஆணையம், ஜைன சிறுபான்மையினர் ஆணையம், கிறுத்துவர் சிறுபான்மையினர் ஆணையம், இசுலாமியர் சிறுபான்மையினர் ஆணையம் என பிரிக்கப்பட்டு ஓர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறையாக மாற்றப்பட வேண்டும் எனவும், பௌத்தர்கள் தமது சிறுபான்மையின அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை பெறுவதற்கும் தகுந்த சட்டப்பாதுகாப்புகளை உருவாக்கித் தரவேண்டும்.
 4. பௌத்த மதத்தவர்களுக்கௌ தனி நல வாரியம் ஒன்றை அமைத்து அவர்களின் மேம்பாட்டிற்கு உதவ வேண்டும்.
 5. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்க்ளை நடத்த அரசு உதவி செய்வதைப் பொல பௌத்த மதச் சிறுபான்மையினர் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களை தொடங்கி நடத்திட தேவையான உதவினை வழங்க வேண்டும்.
 6. தமிழகத்தில் உள்ள பௌத்தர்கள் தங்களது மத அடையாளங்களை வெளிப்படையாக அறிவிக்கும் பொருட்டு சான்றிதழ்களில் பதிவதற்கான உரிய வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டு வருவாய் துறை அலுவலர்களுக்கு உரிய ஆவணங்களை வழங்க ஆவணச் செய்ய வேண்டும். மேலும் பௌத்தம் மதமாறிய ஷெட்யூல் சாதிகள் மக்கள் SC சான்றிதழ் பெறுவதற்கு உள்ள தடைகளை முற்றாக நீக்க வேண்டும்.
 7. தமிழகத்தில் உள்ள பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகள் பேருந்து மற்றும் தொடர் வண்டிகளில் இலவசமாக பயணிக்க தேவையான அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.
 8. பௌத்த நாடுகளில் உள்ள மக்கள் தமிழ்நாட்டின் தொண்மையான பௌத்த தலங்களுக்கு வர விரும்புகின்றனர். ஆனால் அதற்கான உரிய தெளிவான வழிக்காட்டுதல்கள் இல்லை. எனவே தொண்மையான பௌத்த தலங்களை சுற்றுலாத்துறையின் பட்டியலில் இணைத்து மேம்படுத்த உதவுவதின் மூலமாக தமிழகத்திற்கு சுற்றுலாத் துறையின் மூலம் அதிக வருமானத்தினை ஈட்ட முடியும்.
 9. பௌத்தர்கள் விகாரைகளில் செய்துக் கொள்ளும் திருமணங்களை அங்கீகரிக்கும் விதமாக பௌத்தத் திருமணச் சட்டம் ஒன்றை அரசு இயற்ற வேண்டும்
 10. தமிழக அரசின் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தரின் சிலைகள் மற்றும் பௌத்த தெய்வங்களின் சிலைகளை அருங்காட்சியகங்களில் வைப்பதின் மூலம் மக்கள் பார்வையிலிருந்து அவை விலக்கப்பட்டுள்ளன. மேலும் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்ட சிலைகள் அவை கிடைத்த இடங்களில் முறையாக சிறு விகாரைகள் கட்டி அவற்றை அங்கே நிர்மாணிக்க வேண்டும் என்றும், மக்கள் வழிபாட்டிற்கு அவற்றை மீண்டும் கொண்டு வர உதவ வேண்டும்,
 11. காஞ்சி புத்தர் கோவிலுடன் இணைத்து, உலகப் புகழ்பெற்ற தமிழக ஜென் பௌத்த துறவியான போதிதர்மருக்கு, உலக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நினைவு மண்டபம் (14 ஏக்கர் நிலப்பரப்பில்) அமைப்பதற்கான திட்டம் ஒன்று தமிழ்நாடு சுற்றுலாத்துறையினால் உருவாக்கப்பட்டது. அந்த வரைவு அறிக்கை அரசு ஒப்புதலுக்காக சுற்றுலாத்துறையில் நிலுவையில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த திட்டத்தை தங்களின் பெரு முயற்சியினால் செயல்படுத்திட வேண்டும்.
  மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கையோடு தங்களது மேலான பார்வைக்குக் கொண்டு வருகிறோம். இவற்றை தமிழக அரசின் கவனத்திற்கு தாங்கள் கொண்டுச் சென்று தீர்வு காண்பீர்கள் என நம்புகிறோம்.

நன்றி

இவண்

ஜா.கௌதம சன்னா பிக்கு. அரிய பிரம்மா
நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சங்க பரிபாலன மகா துணைச்செயலர்
தமிழ்நாடு பௌத்தர் சங்க பேரவை (TNBSC) தமிழ்நாடு பௌத்தர் சங்க பேரவை (TNBSC)


நகல்கள்

மாண்புமிகு தமிநாடு முதலமைச்சர் அவர்கள்
தலைமைச் செயலகம், தமிழ்நாடு அரசு
சென்னை, தமிழ்நாடு.
மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள்
இந்து அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு.

உயர்திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள்
தலைவர், தமிழ்நாடு சிறுபாண்மையினர் நல ஆணையம்

இணைய நிர்வாகம்

Back to top button